Wednesday, February 5, 2014

விமர்சனம் - செம்மலர்

மேலாண்மை பொன்னுச்சாமி-

திசைமாறிய தென்றல், கண்ணின் மணி நீயெனக்கு - ஆகிய இரு நாவல்களைத் தந்த அகில் (சாம்பசிவம் அகிலேஸ்வரன்) 'கூடுகள் சிதைந்தபோது' என்ற சிறுகதைத் தொகுப்பின் வழியாகவும் தற்போது வெளிப்பட்டிருக்கிறார்.
 
அகில் இலங்கைத் தமிழ் எழுத்தாளர், புலம் பெயர்ந்த இலங்கைத் தமிழிலக்கியம் என்ற புதிய வகைப்பாட்டில் முக்கிய இடத்தைப் பிடிக்கிறவர்.
 
நான் படித்த கட்டுரை நூல்களின் வாயிலாகப் பிடிபடாத இலங்கை வாழ்க்கை, இந்த ஒரே ஒரு சிறுகதைத் தொகுப்பில் அதன் ஆன்மாவுடன் சோந்து பிடிபடுகிறது.
 
அந்தத் தமிழர்களின் முகங்கள், தோற்ற அசைவுகள், மொழியின் உச்சரிப்புகள், சுற்றியுள்ள இயற்கைச் சூழலின் சலனங்கள், அவர்களது துயரங்கள், மனக்காயங்கள், ஏக்கங்கள், கனவுகள், வைராக்யம் எல்லாமே சிறுகதைகளின் வழியாக நம்முள் இறங்கி நமது அனுபவமாகின்றன.
 
தமது அனுபவ எல்லை வட்டத்திற்குள் நிகழ்ந்த நிகழ்வுகளையே எழுத்தாக்குகிற நேர்மை வாசிக்கும்போதே நமக்குள் ஒரு நம்பகத்தன்மையை ஏற்படுத்துகிறது.
 
அகில் இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்து கனடாவில் வாழ்ந்தவர். கனடாவில் இருந்தபோது அம்மாவைப் பார்க்க வந்;துபோன தருணத்தில் பார்த்த போர்க்கால இறுதி நாட்களை அதற்குரிய வலிகளுடன் நெஞ்சு துடிக்க எழுதுகிறார்.
 
'கூடுகள் சிதைந்;தபோது' கதையில் ஒரு பறவையை கார் சக்கரம் நசுக்க, இணைப்பறவையின் உயிர்த்துடிப்புடன் கதை துவங்குகிறது. வவுனியாக்காட்டுப் போரில் தனது மனைவியையும், குழந்தையையும் மரணத்தின் கொடிய கரங்கள் தட்டிப் பறித்துக்கொண்ட நினைவின் துடிப்புகள். 'நான் விசரன்' என்று அந்த மனிதனின் மனப் புலம்பல் நம்;முள் ரத்தம் கசியவைக்கிறது.
 
'பெரிய கல் வீடு', 'கண்ணீர் அஞ்சலி', 'கூடுகள் சிதைந்தபோது' ஆகிய கதைகளில் போர்க்காட்சியும், உயிர்ப்பறிப்புக் கொடூரங்களும் காட்சிப் படுத்தப்படுகிறன.
 
எரிந்து சாம்பலான வாழ்வின் நெடியாக யுத்த நாற்றம் இத்தொகுப்பின் அத்தனை கதைகளிலும் வீசுகிறது. மரணம், கொலை, தப்பித்தோடல்கள், உயிர்ப்பந்தங்களை விட்டு வந்த ரணங்கள் என்று போரின் கொடூர நாற்றம் எல்லாக் கதைகளிலும் நெஞ்சைத் தாக்கி 'போரில்லாத ஓர் உலகமும் காலமும் வராதா' என்று ஏங்க வைக்கிறது.
 
'பெரிய கல் வீடு' மறக்க முடியாத அளவுக்கு மனசுக்குள் வேரடித்து நிலைத்துவிடுகிறது. கணவனை இழந்த நிலையில்; அந்தப் பெரிய கல் வீடு, அதுவும் மாடி வீடு கட்ட அவள்பட்டபாடுகள். அடைந்த இன்னல்கள்... பிள்ளைகளுடன் அந்த வீட்டில் சேர்ந்து வாழவிடாமல் யுத்தமும் மரணபயமும் துரத்த வீட்டைவிட்டு விலகாமல் நிலைத்திருக்கிற அவள். யுத்தம் அவளை சிதைத்து விடுகிறபோது உறவினர்களால் தள்ளி வைக்கப்பட்ட தலித் பெண் தங்கம்தான், சிதைந்து நாறிப்போன அந்த உடம்புக்கு இறுதி மரியாதையும், ஈமக்கிரியைகளும் செய்து நல்லடக்கம் பண்ணுகிறான்.
 
சிங்;களர் - தமிழர் இடையே உள்ள நெகிழ்ச்சி மிக்க உறவின் ஒரு முகத்தையும் சிறுகதை பதிவு செய்கிறது.
 
கனடா நாட்டின் மேற்குலக வாழ்வியல் கலாச்சாரம் தஞ்சமடைந்த இலங்கைத் தமிழர் குடும்பங்களில் ஊடுருவிக் கலந்து தாயுறவையும், குடும்பக் கட்டுமானத்தையும், கல்யாண உறவுகளையும் எப்படியெல்லாம் சிதைக்கிறது. என்கிற யதார்த்தத்தை உணர்ச்சி பூர்வமாக இறக்கி வைக்கின்றன சில சிறுகதைகள்.

முள்வேலி முகாமுக்குள் அடைப்பட்ட தமிழர் வாழ்வின் நாட்கள் வரைக்கும் போரின் கொடிய கரங்களின் குரூரத்தை உணர்த்துகிற சிறுகதைகள், 'போரில்லாத உலகமும் காலமும் கொண்டுவர நீ என்ன செய்யப்போகிறாய்' என்ற கேள்வியை நம்முள் வைத்து, நமது மனசாட்சியை உலுக்குகிறது.
 
நூலை அழகுற வெளியிட்ட திருவண்ணாமலை வம்சி பதிப்பகத்தை எத்தனைப் பாராட்டினாலும் தகும்.

வெளியீடு: வம்சி புக்ஸ், 19, டி.எம்.சாரோன், திருவண்ணாமலை.விலை: ரூ 120.
 
நன்றி: செம்மலர்
 

No comments:

Post a Comment